html

Thursday 24 December 2015

சந்திர மௌலீஸ்வரர் கோவில்,திருவக்கரை., திண்டிவனம்.
















































திருவக்கரை (Thiruvakkarai): 2 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்மரங்கள் (20 Million Years Old Fossilised Tree)


திருவக்கரை தொல்பழங்கால, வரலாற்றுக்கால ஊராகும். திருவக்கரை இயற்கைச் சிறப்பு மற்றும் பண்பாட்டுச்சிறப்பு பெற்ற ஊராகும்.

அமைவிடம்

இவ்வூர் திண்டிவனத்திலிருந்து மைலம் வழியாகச் செல்லும் பாண்டிச்சேரி சாலையில் சுமார் 23 கி.மீ தொலைவில் உள்ளது.

கல்மரங்கள்

இங்கு பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முற்பட்ட மரங்கள் கல்லாகி படிவங்களாகக் (fossils) காணப்படுகின்றன.

இங்கு ஒரு கல்மரப் பூங்கா உள்ளது. இது போன்ற கல் மரங்கள் கிடைக்கும் இடங்கள் தமிழகத்தில் வெகு சிலவே உள்ளன.

தொல்பழங்காலச் சான்றுகள்

இங்கு பழங்கற்கால மக்கள் பயன்படுத்திய கற்கருவிகள், கல் மரங்களுக்கு அருகில் காணப்படுகின்றன. இவற்றில் சுரண்டிகள். செதில் கருவிகள் ஆகியவை குறிப்பிடத் தக்கவையாகும். இந்தக் கல் மரத்துண்டுகளும், குவார்ட்சால் ஆன கூழாங்கற்களும் கருவிகள் செய்யப் பயன்படுத்தப்பட்டுள்ளன

பெருங்கற்காலச் சான்றுகள்

இங்கு பெருங்கற்காலத் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் கருப்பு-சிவப்பு மற்றும் சிவப்புப் பானைகள் காணப்படுகின்றன. மேலும் கருங்கற்களாலான கருவிகளும் கிடைக்கின்றன. இவைகளும் கல் மரங்களும் அருகிலேயே காணப்படுகின்றன.

கோவில்

இங்கு வரலாற்றுச்சிறப்பு மிக்க சிவன் கோவில் உள்ளது. இதன்பெயர் சந்திர மௌலீஸ்வரர் என்பதாகும். இக்கோவிலில் சோழர் காலத்தைச் சேர்ந்த முதலாம் இராசராசன் மற்றும் குலோத்துங்கன் கல்வெட்டுக்கள் உள்ளன. சோழ அரசன் கண்டராதித்தனின் மனைவியான செம்பியன் மாதேவி, இங்கு திருப்பணி செய்துள்ளார். இக்கோவிலில் தேவரடியார்கள் பற்றிய கல்வெட்டுக் குறிப்புகள் உள்ளன.





Wednesday 16 December 2015

கோவூர் ஸ்ரீசுந்தரேஸ்வரர் கோவில்,சென்னை

ஸ்தல வரலாறு:

போரூர்-குன்றத்தூர் வழியில் அமைந்துள்ள கோவூர் ஸ்ரீசுந்தரேஸ்வரர் கோவில் புதன் தலமாக திகழ்கிறது. இந்த கோவில் கி.பி. 7-ம் நூற்றாண்டில் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டது.

சிவனைத் திருமணம் செய்துகொள்ள வேண்டிக் காமாட்சியம்மன், மாங்காட்டில் அக்னி நடுவில் ஒன்றைக் காலில் நின்று தவம் செய்து வந்தாள். இவளது தவத்தின் காரணமாக உலகின் எல்லா இடங்களிலும் வெப்பம் தகித்தது. சிவன் அப்போது கண்களை மூடித் தவத்தில் ஈடுபட்டிருந்தார். முனிவர்களும், தேவர்களும் மகாவிஷ்ணுவிடம் உலகை காக்கும்படி முறையிட்டனர்.

விஷ்ணு மகாலட்சுமியைப் பார்த்து உலகை காக்கும்படி கூறினார். மகாலட்சுமி பசுவடிவில் வந்து சிவனை வழிபட்டாள். இதனால் சிவன் தியானத்திலிருந்து கண் திறந்தார். உலகம் மீண்டும் குளிர்ச்சியாயிற்று. மகாலட்சுமி பசுவடிவில் சிவனைப் பூஜை செய்த இடமானதால் கோபுரி என்று அழைக்கப்பட்டது. பின்னர் அதுவே மருவி கோவூர் என்று ஆகிவிட்டது.

இந்த கோவில் புதன் பகவானின் தலமாக விளங்குகிறது. சுந்தரேஸ்வரரையும், சுந்தராம்பிகையையும் பூஜித்தால் கோரியவரங்கள் சித்தியாகின்றன. இந்த ஊரில் ஏதோ மகிமை உள்ளது என்று எண்ணிய தியாகராஜர் மீண்டும் கோவூரில் உள்ள திருக்கோவிலுக்கு வந்து 5 கீர்த்தனைகள் சிவன் மீது பாடினார்.


அவை இன்றும் கோவூர் பஞ்சரத்ன கீர்த்தனைகள் எனப்படுகிறது. சேக்கிழார் பிறந்தது இந்த கோவூர் தலமாகும். இக்கோவிலின் தல விருட்சம் மகா வில்வம் ஆகும். இது 27 இலைகளைக் கொண்டது. இதுபோன்ற ஒரு வில்வமரத்தைக் காண்பது அரிது. இது மருத்துவ குணம் கொண்டது. 




















































Friday 27 November 2015

குறுங்காலீஸ்வரர் கோவில்,கோயம்பேடு,சென்னை

குறுங்காலீஸ்வரர் கோவில்,கோயம்பேடு,சென்னை

 ராமனால் தான் இப்புனித தலம் உருவானது. அது பற்றிய புராண வரலாற்றைப் பார்க்கலாம். ராவணனிடம் இருந்து சீதையை மீட்ட பிறகு ராமன் அயோத்தி திரும்பி மகிழ்ச்சியுடன் ஆட்சி நடந்து வந்தார். 


திடீரென ஒருநாள் அவருக்கு மக்கள் தன்னைப் பற்றி என்ன பேசிக் கொள்கிறார்கள் என்பதை அறியும் ஆசை ஏற்பட்டது. இதற்காக அவர் ஒற்றன் ஒருவனை அனுப்பி வைத்தார். அவன் திரும்பி வந்து, ``அரசே இரவில் பிரிந்திருந்த கணவன்-மனைவி இருவரும் சண்டை போடுவதை நான் பார்க்க நேர்ந்தது. 


அந்த கணவன், நான் ஒன்றும் ராமன் அல்ல. அவன் வேண்டுமானால் பலநாள் பிரிந்திருந்த சீதையை சேர்த்துக் கொண்டிருக்கலாம். ஒருநாள் இரவு நீ என்னை பிரிந்ததால் உன்னை இனி நான் என் மனைவியாக சேர்க்க மாட்டேன் என்று கூறினான் என்றான். இதை கேட்ட ராமன், சீதைக்கு தண்டனை கொடுக்க முடிவு செய்தார். 


அப்போது சீதை நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாள். சீதையை அழைத்துச் சென்று காட்டுக்குள் விட்டு வருமாறு லட்சுமணருக்கு ராமர் உத்தரவிட்டார். அதை ஏற்று லட்சுமணர், சீதையை அழைத்து வந்தார். அந்த காலக்கட்டத்தில் இப்போதைய கோயம்பேடு தர்ப்பைப் புற்கள், மாமரங்கள், பலா மரங்கள் நிறைந்த பகுதியாக இருந்தது.


கூவம் நதி புனித நதியாக ஓடிக் கொண்டிருந்தது. சீதையை அங்கு விட்டு, விட்டு லட்சுமணர் சென்றுவிட்டார். தனிமையில் விடப்பட்ட சீதை தன் நிலையை எண்ணி சத்தம் போட்டு கதறி அழுதார். திருவான்மியூர் வனப் பகுதியில் ஆசிரமம் அமைத்து தங்கி இருந்த வால்மீகி முனிவர், தர்ப்பை சேகரிக்க வந்தார். 









சீதையின் அழுகுரல் கேட்டு சென்றவர், எல்லாவற்றையும் அறிந்தார். பிறகு சீதையை அவர் தன்னுடன் தங்க செய்து கவனித்துக் கொண்டார். சிறிது நாளில் சீதை லவன் எனும் மகனை பெற்றெடுத்தார். ஒருநாள் லவனை காணாததால் வால்மீகி முனிவர் தர்ப்பையை கிள்ளிப் போட்டு குசனை உருவாக்கினார். 

லவன், குசன் இருவரும் எல்லாவித பயிற்சிகளையும் கற்று சிறந்த வீரர்களாக தேர்ச்சி பெற்றனர். இந்த நிலையில் அயோத்தியில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. பஞ்சத்தை போக்க ராமர் அஸ்வமேத யாகம் நடத்த ஏற்பாடு செய்தார். இதற்காக யாகக் குதிரை ஒன்றை நாடெங்கும் உலா செல்ல அனுப்பினார். 

ராமர் அனுப்பிய குதிரை என்பதால், எல்லா நாட்டு மன்னர்களும் அதற்கு மரியாதை செய்து அனுப்பி வைத்தனர். வால்மீகி முனிவரின் ஆசிரமத்துக்கு வந்த அந்த குதிரையை லவன், குசன் இருவரும் சேர்ந்து கட்டிப் போட்டனர். அதனால் தான் இந்த இடம் கோயம்பேடு என்று அழைக்கப்படுகிறது. 

(கோ- அரசன், அயம்- குதிரை, பேடு- கட்டுதல் என்று பொருள்). இதை அறிந்ததும் படை வீரர்களுடன் லட்சுமணர் அங்கு விரைந்தார். அவர்களை லவன், குசன் இருவரும் போரிட்டு தோற்கடித்து விரட்டியடித்தனர். இதனால் வெகுண்டடெழுந்த ராமர், தானே நேரடியாக போர் களத்துக்கு வந்தார். 

அவருடனும் சிறுவாபுரி எனுமிடத்தில் லவன், குசன் இருவரும் போரிட்டனர். அப்போது வால்மீகி விரைந்து வந்து, நீங்கள் போரிடுவது உங்கள் தந்தையுடன்தான் என்று விளக்கமாக எடுத்துக் கூறினார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த லவன், குசன் இருவரும், எங்கள் தந்தையுடன் சண்டையிட்ட தோஷம் நீங்க ஏதாவது வழி சொல்லுங்கள் என்று வால்மீகியிடம் கேட்டனர். 




அதற்கு வால்மீகி முனிவர், "சிவலிங்கம் ஒன்றை ஸ்தாபித்து, அதற்கு பூஜை செய்து வழிபட்டால் உங்கள் தோஷம் நீங்கும்'' என்றார். அதன்படி லவன், குசன் இருவரும் குதிரையை கட்டிப் போட்ட இடத்தில் சிவலிங்கம் ஒன்றை நிறுவினார்கள். தங்கள் உயரத்துக்கு ஏற்ப உயரம் குறைந்த லிங்கத்தை அவர்கள் நிறுவி வழிபட்டனர். 

இதனால் அவர்களது தோஷம் நீங்கியது. அவர்கள் வழிபட்ட லிங்கத்துக்கு "குசலவபுரீஸ்வரர்'' என்ற பெயர் ஏற்பட்டது. பின்னாளில் அது குறுங்காலீஸ்வரர் என்ற பெயரை பெற்றது. இனி இந்த ஆலயத்தின் அமைப்பையும், இறை மூர்த்தங்களின் மகிமைகளையும் காணலாம். 

குறுங்காலீஸ்வரர் கோவில் 226 அடி நீளம், 137 அடி அகலம் கொண்டது. கோவில் இடது பக்கத்தில் வைகுண்ட வாசப் பெருமாள் கோவில் உள்ளது. சைவ-வைணவ ஒற்றமைக்கு எடுத்துக்காட்டாக திகழும் இத்தலத்துக்குள் வால்மீகி முனிவர் தவக் கோலத்தில் உள்ளது போன்ற சிற்பம் உள்ளது. 

அருகில் சீதை, லவன், குசன் உள்ளனர். குறுங்காலீஸ்வரர் கோவில் முன்பக்கத்தில் 16 கால் மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இந்த மண்டபத்தின் தூண் ஒன்றில் சரபேசுவரர் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை தோறும் மாலை 4.30 - 6 மணி ராகு காலத்தில் இந்த சரபேசுவரருக்கு சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. 

சமீப காலமாக இந்த பூஜையில் கலந்து கொண்டு சரபேசுவரரை வணங்குபவர்கள் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் பெருகிவிட்டது. இத்தல சரபேசுவரரை வழிபட்டால் எதிரிகள் தொல்லை நீங்கி வெற்றிகள் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த 16 கால் மண்டப தூண்களில் ராமாயணக் காட்சிகள் செதுக்கப்பட்டுள்ளன. 


நுழைவாயிலில் 5 நிலை ராஜகோபுரம் நம்மை வரவேற்பது போல உள்ளது. ராஜகோபுரத்தை வணங்கி உள்ளே சென்றால் கொடி மரம், பலி பீடங்களை காணலாம். அடுத்து 4 கால் மண்டபத்தில் நந்தி உள்ளார். ஒரு தடவை இவர் சித்தம் கலங்கி தவித்தார்.

அவருக்கு ஈசன் தெளிவை உண்டாக்கினார். இதனால் நந்தி, ஈசனுக்கு கட்டுப்பட்டவர் போல மூக்கணாங்கயிறுடன் காணப்படுகிறார். பல ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த ஆலயத்தின் இந்த நந்தியிடம் இருந்து தான் பிரதோஷ நிகழ்வு தோன்றியதாக கருதப்படுகிறது.

இதனால் இந்த ஆலயத்தில் ஒவ்வொரு பிரதோஷமும் மிக விமரிசையாக நடத்தப்படுகிறது. இத்தலத்தில் ஒரு பிரதோஷம் பார்த்தால் ஆயிரம் பிரதோஷம் பார்த்ததற்கு சமமாகும். அதுபோல ஒரு சனி பிரதோஷத்தில் பங்கேற்றால், அது கோடி பிரதோஷத்தில் பங்கேற்று தரிசனம் செய்த பலனை தருமாம்.

குறுங்காலீஸ்வரர் தலத்தில் நந்தி பெருமானை வழிபட்டு கோடி பிரதோஷத்தில் பங்கேற்ற பலனை பெறத் தவறாதீர்கள். நந்தியை கடந்து சென்றால் 40 தூண்களுடன் கூடிய பிரமாண்ட மண்டபத்தை அடையலாம்.

இந்த மண்டப தூண்களில் ஏராளமான கண்கவர் சிற்பங்கள் இருப்பதை காணலாம். லவ, குச இருவரும் அஸ்வமேதயாக குதிரையைக் கடிவாளத்தோடு பிடித்துக் கொண்டிருக்கும் சிற்பம் கலை நயம் மிக்கது. இந்த மண்டபத்தின் நுழையும் பகுதியில் விசாலாட்சி சமேத விசுவநாதர் சன்னதியும், சோமாஸ்கந்தர் சன்னதியும் உள்ளன.

அவர்களை தரிசித்து விட்டு ஈஸ்வரன் வீற்றிருக்கும் சன்னதிக்கு செல்லலாம். ஈஸ்வரன் சன்னதி இடது பக்கம் துயர் தீர்க்கும் தும்பிக்கை விநாயகரும், வலது பக்கம் பாலசுப்பிரமணியரும் உள்ளனர். கருவறையில் சுமார் 4 அங்குல உயரமே கொண்ட லிங்க பாணத்தை கண் குளிர காண வேண்டும்.

லவனும், குசனும் ஸ்தாபித்து வணங்கி வழிபட்ட இந்த லிங்கத்தை மனம் உருகி வழிபட்டால் எத்தகைய பித்ரு தோஷம் இருந்தாலும் விலகி விடும். இங்கு ஈசன் வடக்கு பார்த்து இருப்பதால் கருவறை கோஷ்டத்திலும் மாறுதலை பார்க்கலாம்.

விநாயகர், பிரம்மா, ஈஸ்வரனுக்கு பின்புறம் தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, விஷ்ணு துர்க்கை உள்ளனர். இந்த உள் பிரகாரத்தின் தொடக்கத்தில் நடராஜர், சூரியன், சந்திரன் உள்ளனர். கோமுக தீர்த்தம் விழும் இடத்துக்கு அருகில் சண்டிகேசுவரர் சன்னதி அமைந்துள்ளது.

இவரைத் தொடர்ந்து விக்னேஸ்வரர், ஜுரகேசுவரர், அகஸ்தீசுவரர், கணேசமூர்த்தி, சாஸ்தா, கார்த்திகேயன், லிங்கம், திருமகள், சைவநால்வர், ஞானவாணி, நாகர்கள் ஆகியோரை தரிசனம் செய்யலாம். ஈஸ்வரனின் இந்த பிரகார வலம் முடிந்து அம்பாள் சன்னதிக்கு செல்லலாம்.

பாசம், அங்குசம், வரதம், அபயம் தாங்கிய 4 கைகளுடன், இடது பாதத்தை முன் எடுத்து வைத்த நிலையில் தர்மசம்வர்த்தினி எனும் அறம் வளர்த்த நாயகி வீற்றிருக்கிறார். பக்தர்களின் துயர் தீர்க்க அம்பாள் புறப்படுவது போல அறம் வளர்த்த நாயகியின் தோற்றம் உள்ளது.

இவளை வழிபட திருமணம் கை கூடும். வியாதிகள் தீரும். மனக் குழப்பங்கள் அகலும் என்பது நம்பிக்கை. அம்மன் பிரகாரத்தை வலம் வந்து வழிபட்ட பிறகு அருகில் உள்ள நவக்கிரகங்களை வழிபடலாம். தாமரை பீடத்தில் நடுவில் 7 குதிரைகள் பூட்டிய தேரில் மனைவியுடன் சூரியன் உள்ளார்.

கீழே மற்ற கிரகங்கள் உள்ளன. வெளி சுற்றில் நந்தி சன்னதிக்கு வலது பக்கம் வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணியர் உள்ளார். இவரை அருணகிரி நாதர் பாடியுள்ளார். இந்த சன்னதி அருகில் அண்ணாமலையார் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார்.

வெளி பிரகாரத்தை சுற்றி வந்தால் வில்வ விநாயகர், மடப்பள்ளி யாக சாலை, தலமரமான பலா ஆகியவற்றை காணலாம். லவன், குசன் இருவரும் உருவாக்கிய லவகுச தீர்த்தம் சிவால யத்துக்கும், பெருமாள் கோவிலுக்கும் பொதுவான தீர்த்தமாக உள்ளது.

கி.பி. 985 முதல் 1014 வரை ஆண்டு ஜெயம்கொண்ட சோழ மன்னர் இந்த கோவிலை பெரிய கற்கோவிலாக கட்டியதாக கூறப்படுகிறது. விஜய நகர மன்னர்களும் இங்கு திருப்பணி செய்துள்ளனர். இத்தலத்தில் சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், ஆனி பிரம்மோற்சவம், ஆடிப்பூரம், நவராத்திரி, கார்த்திகை தீபம், மாசிமகம், சிவராத்திரி ஆகியவை சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

ஈசன் இங்கு வடக்கு திசை பார்த்திருப்பதால் இத்தலம் மோட்சம் தரும் தலமாக கருதப்படுகிறது. இது தவிர சித்தர்கள், சப்தரிஷிகள், தேவர்கள், முனிவர்கள் இங்கு சூட்சம நிலையில் அருள் பாலிக்கிறார்கள். இத்தகைய சிறப்பு வாய்ந்த தலத்தை வாழ்வில் ஒரு முறையாவது தரிசனம் செய்வது நல்லது. ஆலயத்தை 044-24796237 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். 








காசிக்கு இணையான தலம் :


இந்த ஈஸ்வரனை வணங்கி லவன், குசன் இருவரும் தோஷ நிவர்த்திப் பெற்றதால், இவரை வணங்குபவர்களின் பித்ரு தோஷம் நீங்கும் என்பது ஐதீகமாகும். இதை அறிந்து தமிழ் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் இத்தலத்துக்கு வந்து குறுங்காலீஸ்வரரை வழிபட்டு பித்ரு தோஷத்தைப் போக்கிக் கொள்கிறார்கள். 

இத்தலத்தில் குறுங்காலீஸ்வரர் காசி இருக்கும் வட திசையை பார்த்தப்படி உள்ளார். அதனால் இத்தலம் காசிக்கு இணையான புனித தலமாக கருதப்படுகிறது.


Thursday 26 November 2015

காரணீஸ்வரர் கோவில்,சைதாபேட்டை,சென்னை






காரணீஸ்வர் கோவில்  தமிழ்நாட்டில் சென்னை மாவட்டத்தில் உள்ள மேற்கு சைதாப்பேட்டையில் அமைந்திருக்கும் சிவாலயமாகும். இக்கோவில் திருக்காரணீசுவரம் என்றும் அறியப்பெறுகிறது.
இச்சிவாலயத்தின் மூலவர் காரணீஸ்வரர், தாயார் சொர்ணாம்பிகை. சுற்றுபிரகாரத்தில் சௌந்திரஸ்வரர் மற்றும் திரிபுரசுந்தரி சந்நிதியும் உள்ளது.
தல வரலாறு
தமிழகத்தில் உள்ள முக்கிய சிவாலயங்களில் ஒன்றாகவும், 450 ஆண்டுகள் பழமை வாய்ந்ததுமாக விளங்குவது சென்னை சைதாப்பேட்டையில் உள்ள சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் கோவில் ஆகும். காமதேனு எனும் தெய்வ பசுவினை தேவேந்திரனிடம் இருந்து பெற்ற வசிஷ்ட முனிவர், தான் பூஜை செய்யும் போது இடையூறு செய்ததாக கருதி அதனை காட்டுப்பசுவாக மாற்றிவிட்டார்.
இதனை அறிந்த தேவேந்திரன் இந்த பகுதியை மழையால் குளிரவைத்து, சோலையாக்கி சிவனை நோக்கி லிங்க பிரதிஷ்டை செய்து காமதேனு பசுவை மீட்டார். இதனால் இப்பகுதி திருக்காரணி என்று அழைக்கப்பட்டது.
இதையடுத்து இப்பகுதியில் கோவில் எழுப்பப்பட்டது. இத்தலத்தின் நாயகர் காரணீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.
இங்கு இந்திரன், மால், அயன் முதலிய கடவுளர்களும், சிவசைதனிய முனிவரும், ஆதொண்ட சக்கரவர்த்தியும், குருலிங்க சுவாமி முதலிய சிவத்தொண்டர்களும் வழிபட்டு முக்தி பெற்றுள்ளனர் என்பது வரலாறு.











இச்சிவாலயம் தென்திசையில் ராஜகோபுரத்தினை கொண்டுள்ளது. இந்த ராஜகோபுரத்தின் நுழைவாயிலில் பத்ரகிரியார், பட்டினத்தார் சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இச்சிவாலயத்தின் மூலவரான காரணீஸ்வரர் கிழக்கு நோக்கி அமர்ந்திருக்கிறார். அவருக்கு அருகிலேயே சொர்ணாம்பிகை அம்மன் சந்நிதி உள்ளது. உள் சுற்றுப் பிரகாரத்தில் அறுபத்து மூன்று நாயன்மார்களும், தட்சிணாமூர்த்தி, திருமால், சண்டேசர், துர்க்கை, பைரவர் சந்நிதிகளும் அமைந்துள்ளன. வெளிச் சுற்றுப் பிரகாரத்தில் மூலவருக்கு வலதுபுறம் விநாயகரும், இடது புறம் வள்ளி தெய்வானையுடன் முருகனும் இருக்கிறார்கள்.
அத்துடன் வேதகிரீஸ்வரர் என்ற பெயரில் சிவலிங்க திருமேனியும், திரிபுரசுந்தரி என்ற அம்மனும் வெளிச்சுற்றில் தனிச் சந்நிதிகளில் இருக்கின்றார்கள். சனீஸ்வரன், பழனி முருகன், ஆஞ்சநேயர், நவகிரகங்கள், வீரபத்திரன் ஆகியோருக்கு தனிச்சன்னதிகள் உள்ளன.
வீரபத்திரன் சந்நதி கோபுரத்தில் தட்சன் ஆட்டு தலையுடன் காட்சியளிக்கின்றார்.














Wednesday 25 November 2015

சிவன் கோவில்,கலவை, வேலூர்





The modern village Kalavai, in Arcot taluk of North Arcot district, Tamil Nadu, situated about 100 km from Madras is a village of historic importance from the time of the Pallavas in the 8th century. Ancient relics and inscriptions relating to the village are found in the local Siva temple named thirukkaraesvara temple. Probably the temple was built by one Thirukkarai and hence the name Thirukkaraesvara (on anology with Rajarajeshvara). If so the history of the village could be traced to the Sangam age. The area was under the control of the Malaiyamāns of Thirukkoiyilur where ruled the famous chiefain Malaiyamān Thiru-mudikkārai who has been sung by eminent Sangam poets like Auvaiyār, Paranar, and Kapilar. It is not unlikely that Thirukkarai of this family built the Siva temple after whom it came to be called Thirukatisvaram. The Sthala purāna of the village seems to support this antiquity. Its close link to Malaiyanur may be seen in the sequence.










Tuesday 24 November 2015

ஜலநாதீஸ்வரர் கோவில்,தக்கோலம்.,அரக்கோணம்





சோழ தேசத்தை மட்டும் ஆண்டு கொண்டிருந்த சோழ மன்னர்கள் தங்கள் பெருவலிமையால் சோழ தேசத்தை விரிவுப்படுத்தினார்கள்.

குறிப்பாக சோழ தேசத்திற்கு வடக்கே இருக்கின்ற வயல்கள் நிறைந்த தொண்டை நாட்டை ஆட்சி செய்ய விரும்பினார்கள். பல்லவர்கள் ஆண்டு கொண்டிருந்த இந்த இடத்தை கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் சோழதேசத்தை ஆட்சி செய்த ஆதித்த சோழன், பல்லவ மரபை கடைசியாக ஆண்ட அபராஜிதனிடமிருந்து போரிட்டு வென்று, தன் ஆட்சியில் சேர்த்துக் கொண்டான்.
சோழதேசம் இந்த ஆதித்த சோழன் காலத்திலிருந்து வலுவுடைய நாடாக மாறிற்று. கி.பி. பத்தாம் நூற்றாண்டில் ராசாதித்தன் என்ற சோழ மன்னன் திருநாவலூர் என்ற ஊரில் படைவீடு அமைத்து தன்னுடைய வட எல்லையை காப்பாற்றி வந்தான். அப்போது சோழதேசம் நோக்கி படையெடுத்து வந்த மூன்றாம் கிருஷ்ணன் என்கிற ராஷ்டிரகூட அரசனும், பூதகன் என்கிற கங்கதேச அரசனும் ஒன்று சேர்ந்து, ராசாதித்தனை எதிர்த்தார்கள். தக்கோலம் என்ற ஊரில் ராசாதித்தன் அவர்களோடு மிகக் கடுமையாக மோதினார். யானை மேல் இருந்து போரிட்டுக் கொண்டிருந்த ராசாதித்தனை பூதகன் எய்த அம்பு நெஞ்சை ஊடுருவிக் கொன்றது. அங்கேயே ராசாதித்தன் உயிரை இழந்தான். அவனுக்கு ‘ஆனைமேற் றுஞ்சிய தேவர்’ என்று பெயர் வந்தது. நடுவே இருபத்தைந்து ஆண்டுகள் ராஷ்டிரகூடர்களால் அபகரிக்கப்பட்ட இந்த இடம் மீண்டும் சோழமன்னர்கள் கைக்கு மாறியது. அந்த தக்கோலத்தில் மிக அழகான சிவன் கோவில் ஒன்று உண்டு.
தக்கோலத்தை திருவூறல் என்றும் அழைக்கிறார்கள். எந்தக் காலத்திலும் நீருக்குப் பஞ்சமில்லாமல் எப்போதும் பூமியில் நீர் ஊறிக் கொண்டிருக்கும் என்பதால் இதற்கு திருவூறல் என்ற பெயர் வந்தது. அருகே ஓடுகின்ற கொற்றவை என்கிற குசத்தலை ஆறு, மழைக்காலத்தில் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடும் ஆறாகவும், கோடைக் காலத்தில் சிறிதளவு மண்வெட்டினாலும் ஊற்றுப் பெருக்கெடுத்து ஓடும் ஆறாகவும் இருப்பதாலும் இந்த ஊருக்கு திருவூறல் என்று பெயர் வந்திருக்கலாம்.
கோவில் மிக அழகாக இருக்கிறது. ஊர் சிறியதாக இருந்தாலும், கோவில் பெரியதாக இருக்கிறது. ஆனால் கோவில் சரியாகப் பராமரிக்கப்படாமல் செடிகளும், புதர்களும் மண்டிக்கிடக்கின்றன. மிகப் பழமையான கோவில் என்பதை கோவிலின் ஒவ்வொரு அம்சமும் வெளிப்படுத்துகின்றன.

















தட்சன், மகள் தாட்சாயிணியை ஈசனுக்குத் திருமணம் முடித்தான். தான் இறைவனுக்கே மாமனார் என்ற இறுமாப்பில் அலைந்தான். எல்லா மாமனார்களும் செய்வதுபோல மாப்பிள்ளையைப் பற்றி குறைபட்டுக் கொண்டான். மிகப்பெரிய யாகம் ஒன்று அமைத்து, அதற்கு ஈசனுக்கு அழைப்புவிடுக்காமல், தன் இறுமாப்பைக் காட்டினான். ஈசன் தன்னுடைய சக்தியான வீரபத்ரரை தட்சனை நோக்கி அனுப்ப, வீரபத்ரர் தட்சனின் படைகளைக் கலைத்து அவன் தலையை வெட்டி, அவனுடைய தலைக்கு பதிலாக ஆட்டுத் தலையை வைத்துவிட்டார். அந்நிலை கண்டு தட்சன் ஓலமிட்டான். ஈசன் மனமிரங்கி திருமாலும், பிரம்மாவும், விநாயகரும் பார்க்க அவன் தக்கோலத்தில் பூஜை செய்ய வேண்டுமென்றும், அந்த சிவபூஜையை அவர்கள் கவனித்து வருவார்கள் என்றும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் அவனுக்கு கதிமோட்சம் கிடைக்குமென்றும் சொல்ல, விஷ்ணுவும் பிரம்மாவும் விநாயகரும் உள்ள அந்தக் கோவிலில் தட்சன் இடையறாது பூஜை செய்து சாபம் நீங்கப்பெற்றான். தட்சன் வாய்விட்டு, ஓலமிட்டு, சிவனைப் பார்த்து அழுத தலமென்பதால் தக்கன் ஓலம் என்பதே தக்கோலம் என்று மாறியது என்று சொல்கிறார்கள்.
தட்சிணாயணத்திலும், உத்தராயணத்திலும் கோவிலிலுள்ள சிவலிங்கம் நிறம்மாறுகிறது என்கிறார்கள். தட்சிணாயணத்தில் வெண்மையாகவும், உத்தராயணத்தில் சிவந்தும் சிவலிங்கம் இருப்பதாக சொல்லப்படுகிறது. கருவறையின் வாசலில் மிக அழகாக சோமாஸ்கந்தர் புடைப்புச் சிற்பம் ஒன்று இருக்கிறது. இரண்டு தேவகணங்கள், இரண்டு பூதகணங்கள் இருக்க, ஒரு கால் மடித்து அமர்ந்த நிலையில் இறைவனும், இறைவியும் இருக்கிறார்கள். சிற்பம் பார்க்கும்போதே கோவிலின் தொன்மை மிக நன்றாகத் தெரிகிறது.
மிக அழகான நிலையில் இரண்டு துவார பாலகர்கள் வெளியே வைக்கப்பட்டிருக்கிறார்கள். சோழர் காலத்து சிற்ப அமைதி அங்கு ததும்புகிறது. கோவிலைச் சுற்றியுள்ள உள்பிராகாரத்தில் பிரயோகச் சக்கரமுள்ள விஷ்ணுவும், பிரம்மாவும் இருக்கிறார்கள். துர்க்கை மிக அழகாக இருக்கிறாள். துர்க்கையினுடைய கை விரலும், உதடும், மூக்கும், புருவமும், உசிந்த இடையும், கனிந்த பார்வையும் நம்மைப் பார்த்துக் கொண்டே இருக்கச் செய்கின்றன.
இறைவனுக்கு ஜலநாதீஸ்வரர் என்று பெயர். இறைவிக்கு கிரிராஜ கன்னிகை என்றும் மோகனவல்லி என்றும் பெயரிட்டிருக்கிறார்கள்.
கோவிலிலுள்ள கல்வெட்டுகளில் மிகத் தொன்மையானது, பல்லவ மன்னன் அபராஜிதவர்மனின் ஆறாம் நூற்றாண்டுக் கல்வெட்டாகும். அக்கல்வெட்டின் துணைகொண்டு இக்கோவில் கற்கோவிலாக கி.பி. எண்ணூற்று எழுபத்தாறில் கட்டப்பட்டிருக்கலாம் என்று தெரியவருகிறது.
வியாழ பகவானின் மகனான உதத்தியமுனிவர், தன் மைந்தனின் சாபம் தீர, இங்கு சிவலிங்கம் அமைத்ததாகச் சொல்லி குகைக்குள் இருக்கின்ற ஒரு சிவலிங்கத்தைக் காட்டுகிறார்கள். அதற்கும் தினமும் வழிபாடு நடந்துவருகிறது.
ஊருக்கு சரியான பாதை இருந்தும், பேருந்துகள் இங்கு கோயில் எல்லைவரை செல்லாததால், ஊரின் வெளிப்பக்கமே நிற்பதால், கோவிலுக்கு ஜனங்கள் வருவது அரிதாக இருக்கிறது என்று ஊர் மக்கள் குறைபடுகிறார்கள்.
தக்கோலம் மிகமிகப் பழமையான ஒரு கோவில். மிகப்பெரிய வணிக நகரமாக ஒரு காலத்தில் இது திகழ்ந்திருக்கிறது. கி.பி. இரண்டாம் நூற்றாண்டில், கிரேக்கநாட்டு நிலவியல் ஆசிரியர் தாலமி தாம் இயற்றிய நூலில் தக்கோலத்தை ‘தகோல’ என்று குறிப்பிட்டிருக்கிறார். கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் மிலித்தபன்கா என்ற பௌத்த நூலிலும் தக்கோலத்தைப்பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
அவனி நாரணன் என்கிற மூன்றாம் நந்திவர்மன் ஆட்சியின்போது இங்கிருந்து வணிகத்தின் காரணமாக மலேயா சென்ற வணிகர்கள், சியாம் நாட்டில் தகோப என்ற மாவட்டத்தில் புதிய தக்கோலம் என்ற ஊரை உருவாக்கினார்கள். ராஜராஜசோழனின் மகனான ராஜேந்திர சோழன், இந்த ஊரை, ‘கலைத்தக்கோர் புகழ் தலைத் தக்கோலம்’ என்று தனது மெய்க்கீர்த்தியில் கூறியுள்ளான். அதாவது சபையில் உள்ள சான்றோர்களால் புகழப்படத்தக்க தகுதியை இந்தத் தக்கோலம் பெற்றிருந்தது என்று சொல்கிறான்.
ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்த இந்தத் தக்கோலம் இன்று ஒரு சிறிய கிராமமாக, வயல்கள் சூழ்ந்த இடமாக, விவசாயத்தை மட்டுமே நம்பிய ஊராக திகழ்கிறது.
தக்கோலக் கோவிலின் மிகச்சிறப்பு யோக தட்சணாமூர்த்தி. சற்று சாய்ந்த நிலையில் மாணவர்களை உற்றுப் பார்க்கின்ற ஆசிரியன் போல உத்திட்ட ஆசனத்தில் அமர்ந்து, நேரில் பேசுவது போன்ற ஓர் உணர்வை அந்தச் சிற்பம் தருகின்றது. தட்சணாமூர்த்தியை, யோகதட்சணாமூர்தி என்று அழைக்கிறார்கள். குரு பெயர்ச்சியின்போது இந்த தட்சணாமூர்த்திக்கு விசேஷமான அபிஷேக ஆராதனைகள் நடக்கின்றன.
சரித்திரப் பிரசித்தி பெற்ற இந்தத் தக்கோல ஊருக்கு ஒரு முறை சென்றால், அந்தக் கோவிலின் அழகைக் கண்டு நீங்கள் நிச்சயம் மகிழலாம்.
சென்னையை அடுத்த அரக்கோணத்திலிருந்து பேரம்பாக்கம் செல்லும் வழியில் உள்ளது, தக்கோலம்.














 தக்கோலம், ஜலநாதீஸ்வரர் கோயில் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலங்களில் 12 வது திருத்தலம். இது வட ஆற்காடு மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தல இறைவனாரின் திருவடியிலிருந்து நீர் வந்ததால் திருஊறல் (திருவூறல்) என்று இத்தலம் பெயர் பெற்றது















தலவரலாறு

தேவகுரு பிரகஸ்பதியின் தம்பி உத்தி முனிவரின் மகன் தீர்க்கதா. தாம் யாகம் நடத்தும் சமயம் ஆசிரமத்திற்கு அருகே வந்த காமதேனுப் பசுவைக் கண்ட தீர்க்கதா, யாகத்திற்கு வருவோரை உபசரிக்க உதவ வேண்ட, இந்திரன் கூறாது தங்க இயலாது என காமதேனு மறுத்ததால் அதனை கட்டிப்போட முயன்றார். இதனால் கோபமுற்ற காமதேனு இட்ட சாபத்திற்கு விமோசனம் பெற நாரதரிடம் அறிவுரை வேண்டினார் தீர்க்கதாவின் தந்தை உத்தி முனிவர். நாரதரது அறிவுரைப்படி திருவூறல் வந்து சிவபெருமானை வழிபட்டு மகனுக்கு சாபவிமோசனம் வேண்டினார். 
இறைவனார், நந்தியை வழிபட்டு, அவரது வாயிலிருந்து தெய்வ கங்கையை வரவைத்து அத்தீர்த்தம் கொண்டு தம்மை வழிபட சாபவிமோசனம் கிட்டும் எனக்கூற அதன்படி தீர்க்கதா செய்து சாபவிமோசனம் பெற்றார். இதனால் இத்தல இறைவனார் ஜலநாதீஸ்வரர் என்ற பெயரில் வழிபடப்பட்டு வருகின்றார்.
சுயம்புலிங்கமான இத்தல இறைவனார், உத்தராயண காலத்தில் இளம் சிகப்பு நிறத்திலும் தட்சிணாயன காலத்தில்வெள்ளை நிறத்திலும் காட்சிதருகின்றார்.மணலால் செய்த சுயம்புலிங்கம் என்பதால் இவருக்கு மஞ்சள் காப்பு மட்டுமே. 
















தக்கன் தலையைக் கொய்த தலம் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). குசத்தலை என்றழைக்கப்படும் கல்லாற்றுக்கரையில் அமைந்த இத்தலத்தில் சம்வர்த்த முனிவர் வழிபட்டுள்ளார். நந்தியின் வாய் வழியேகங்கை நீர் வந்ததாகக் கூறப்படுகிறது





திருவூறல், அரக்கோணத்தில் இருந்து 12 கி.மீ தொலைவிலும், காஞ்சிபுரத்தில் இருந்து 30 கி.மீ தொலைவிலும், சென்னையில் இருந்து 64 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது