html

Showing posts with label திருவாலங்காடு. Show all posts
Showing posts with label திருவாலங்காடு. Show all posts

Thursday, 29 October 2015

திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் திருக்கோயில்,திருவள்ளூர்





சென்னையில் இருந்து அரக்கோணம் செல்லும் வழியில் அமைந்திருக்கும் திருவாலங்காடு என்ற ஊரில் கோயில் கொண்டுள்ளார் வடாரண்யேஸ்வரர். இங்குள்ள அம்மன் வண்டார்குழனி என்ற திருநாமத்துடன் விளங்குகிறார்.
12ம் நூற்றாண்டில் சோழ மன்னரால் கட்டப்பட்ட இந்த கோயில், சிவன் நடனமாடியபோது, அவரது அணிகலன்கள் பூமியின் 5 இடங்களில் விழுந்தன. அவற்றை 1. ரத்ன சபை, 2. கனக சபை, 3. ராஜாத சபை, 4. சித்ர சபை, 5. தாமிர சபைகள் என்று அழைப்பர். அதில் திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் தலம் முதலாவது ரத்ன சபையாக திகழ்கிறது. இது பாடல் பெற்ற தலமாகவும் விளங்குகிறது. காரைக்கால் அம்மையார் தனது மூத்த திருப்பதிகத்தை இத்தலத்தில் தான் பாடியுள்ளார்.








திருவாலங்காடு ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ள இந்த கோயிலுக்குச் செல்லும் வழி பெரும்பாலும் ஆட்கள் நடமாட்டமே இல்லாத பகுதியாகவே இருக்கிறது. அதையும் தாண்டி கோயில் இருக்கும் பகுதியில் தான் சிறிய கிராமம் உள்ளது.
கோயிலின் வாயிலை தாண்டி உள்ளே சென்றால் அங்கு மிகப்பெரிய மண்டபம், திறந்த வெளி, தோட்டம் காணப்படுகிறது. இடது பக்கம் விநாயகர் சன்னதியும், வலது பக்கம் முருகர் சன்னதியும் உள்ளன. அதையடுத்து கோயில் கோபுரம் காட்சியளிக்கிறது. கோயில் கோபுரத்தை கடந்ததும், அங்கும் உள் கோயிலைச் சுற்றி விசாலமான இடம் உள்ளது. வலது பக்கம் வண்டார்குழலி அம்மனும், இடது பக்கத்தில் மண்டபம் போன்ற அமைப்பும் உள்ளது. அதையும் கடந்து உள்ளே செல்லும் போது அதற்குள்ளும் மிக உயரமான தளத்துடன் கூடிய மண்டபம், மற்றும் ஏராளமான இறைவனின் சிலைகள், லிங்கங்கள் காட்சியளிக்கின்றன. அங்குள்ள மண்டபத்தின் தூண்கள் அழகான வேலைபாடுடன் காட்சியளிக்கின்றன.
அங்கு நேரெதிரே வடாரண்யேஸ்வரர் வெள்ளி கிரீடத்துடன் நமக்கு அருள் பாலிக்கிறார். கருவறை வாயிலில் பால துவாரகர்கள் கம்பீரமாக வீற்றிருக்கின்றனர். மனதுக்கு அமைதியும், கண்களுக்கு விருந்தாகவும் காட்சி அளிக்கிறார் வடாரண்யேஸ்வரர். அவர்து உருவம் நமது மனக்கண்களில் நீங்காது நிலை பெற்று விடுகிறது. வடாரண்யேஸ்வரரை வணங்கிவிட்டு இடது பக்கமாக கருவறையில் இருந்து வெளியே வந்ததும், சப்தா மாதாக்கள், தட்சிணாமூர்த்தி, கைலாசநாதர், சிவன், பிள்ளையார் என பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். இங்கு பல சிறப்பு வாய்ந்த சிவலிங்கங்களும் வீற்றிருக்கின்றன.



















இந்த தலத்தின் பின்பக்கம் வலது மூலையில் கோயிலின் தல விருட்சமான மிகப்பெரிய ஆலமரம் வீற்றிருக்கிறது.
மார்கழி திருவாதிரை, பங்குனி உத்திரம் போன்றவை இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதுமட்டும் அல்லாமல், சிவராத்திரி, பிரதோஷம் போன்ற நாட்களிலும் இங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன.
கோயில் நடை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
கோயிலுக்கு செல்லும் வழி
சென்னை – அரக்கோணம் ரயில் மார்கத்தில் அரக்கோணத்துக்கு முன்பிருக்கும் திருவாலங்காடு ரயில் நிலையத்தில் இறங்கி சுமார் 5 கி.மீ. தொலைவில் இந்த கோயில் அமைந்துள்ளது. ரயில் நிலையத்துக்கு மிக அருகே ஏராளமான ஷேர் ஆட்டோக்களும் இயக்கப்படுகின்றன. எப்போதாவது வரும் ஒரு பேருந்தை தவிர, ஆட்டோ ஒன்றுதான் கோயிலையும், ரயில் நிலையத்தையும் இணைப்பதற்கான வழி. இது தவிர, சொந்த வாகனத்தில் செல்வோர் தேசிய நெடுஞ்சாலை 205 ல் (சென்னை – ஆவடி – திருவள்ளூர் – ரேணிகுண்டா வழி) சென்றால் இக்கோயிலை அடையலாம்.
பேருந்து மார்கமாக செல்ல வேண்டும் என்றால், தாம்பரம் அல்லது ஆவடியில் இருந்து திருவள்ளூர் சென்று அங்கிருந்து அரக்கோணம் செல்லும் பேருந்தில் செல்லலாம். அதே போல அரக்கோணத்தில் இருந்து திருவள்ளூர் செல்லும் சில பேருந்துகள்  திருவாலங்காடு வழியாகவும் இயக்கப்படுகின்றன. குறிப்பாக காலை மற்றும் மாலையில் ஒரு அரசுப் பேருந்து ரயில் நிலையத்தில் இருந்து கோயிலுக்கு வந்து செல்கிறது.




















ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயிலாக இருந்தாலும், புதிதாக கட்டிய கோயிலைப் போன்று கோயில் வளாகம் காட்சி அளிப்பது பிரம்மிப்பை ஏற்படுத்துகிறது.
அதில் மாந்தீஸ்வரர் என்ற சிறப்பு வாய்ந்த சிவலிங்கம் இந்த கோயிலில் அமைந்திருப்பது மிகவும் குறிப்பிடத்தக்க விஷயமாகும். ஜென்ம சனி, ஏழரை சனி, அஷ்டமத்து சனி, அஷ்டாமத்து சனி போன்ற கிரகநிலை இருப்போர், மாந்தீஸ்வரரை வணங்கினால் நலம் பெறலாம் என்று கோயிலில் உள்ள குறிப்பு நமக்கு சொல்கிறது. இந்த திருத்தலம் பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய தலமாகவும் உள்ளது. இந்த கோயில் திருத்தணி முருகன் கோயிலுடன் இணைந்துள்ள கோயிலாகும்.
















மூலவர் சந்நிதி வாயிலில் விநாயகரும் முருகனும் உள்ளனர். நேரே மூலவர் காட்சி தருகிறார். வலப்பால் ஆனந்தத் தாண்டவ நடராஜர் திருமேனி - சப்பரத்திலுள்ளது. தெற்கு நோக்கியது. எதிரில் வாயிலுள்ளது. நடராசாவுக்குப் பக்கத்தில் மூலையில் சுரங்கப்பாதை உள்ளது. மூடியுள்ள கல்லைத்தூக்க இருவளையங்களையும் மேலே வைத்துள்ளார்கள். சுரங்கம் எங்குச் செல்கிறதோ? தெரியவில்லை. துவார பாலகர்களைத் தாண்டிச் சென்றால் மூலவர் தரிசனம். சுயம்பு மூர்த்தி. மூலவருக்கு மேல் உருத்திராக்க விதானம் - திருப்பனந்தாள் ஸ்ரீ காசி மடத்துப்பணி உள்ளது.
மூலவரின் பக்கத்தில் போக சக்தி அம்மன் உற்சவத் திருமேனி உள்ளது. சிவலிங்கத் திருமேனியின் மீது கோடுகள் அமைந்துள்ளன. பங்குனி உத்திரத்தில் பெருவிழா நடைபெறுகிறது. ஊருக்குப் பக்கத்தில் காளிகோயில் உள்ளது. இத்தலத்திற்குத் தொடர்புடைய 'பழையனூர்' கிராமம், பக்கத்தில் 2 A.e. தொலைவில் உள்ளது. இறைவன், இறைவி சந்நிதிகள் உள்ளன. இங்குள்ள இறைவன் - அம்மையப்பர், இறைவி -ஆனந்தவல்லி. மேற்கு நோக்கிய சந்நிதி.
பழையனூருக்குச் செல்லும் வழியில், திருவாலங்காட்டிலிருந்து ஒரு கி.மீ.ல் பழையனூர் வேளாளர்கள் எழுபதுபேர் தீப்பாய்ந்து செட்டிப்பிள்ளைக்குத்ந்த வாக்குறுதியைக் காத்த 'தீப்பாய்ந்த மண்டபம்' உள்ளது, திருவாலங்காட்டுப் பேருந்து நிலையத்திலிருந்து பார்த்தாலே மண்டபம் தெரிகின்றது. இங்குள்ள தொட்டியின் உட்புறத்தில் இவர்களுடைய உருவங்கள் செதுக்கப்பட்டள்ளன. யாகம் வளர்த்து இறங்குவது போனற் சிற்பம் உள்ளது. இதன் எதிரில் கிழக்கு நோக்கிய சந்நிதியாகச் 'சாட்சி பூதேஸ்வரர்' காட்சியளிக்கின்றார். எதிரில் தீப்பாய்ந்த இடம் உள்ளது.
தீப்பாய்ந்த வேளாளர்களின் மரபில் பழையனூரில் தற்போதுள்ளவர்கள் நாடொறும் திருவாலங்காடு வந்து இறைவனைத் தரிசித்துச் செல்லும் மரபை நெடுங்காலமாகக் கடைப்பிடித்து வருகின்றார்கள். சதாகாலமும் சேவைக்கு வந்து செல்லும் இவர்கள், இம்மரபைத் பிற்காலத்தோரும் அறியும் வகையில் "கூழாண்டார் கோத்திரம் சதாசேர்வை" என்று கல்லில் பொறித்து, அக்கல்லை, கோயிலின் முன் வாயிலில், உயர்ந்த படியைத் தாண்டியவுடன் முதற்படியாக வைத்துள்ளனர்.







திருவாலங்காட்டில் அரக்கர்களை அழித்து அவர்கள் குருதியை குடித்ததால் காளி அசுரர்களின் பண்பு பெற்று தவமியற்றிய முனிவர்களைத் துன்புறுத்துகிறாள். முனிவர்கள் ஈசனைத் துதிக்க, அவர் அகோர வடிவம் கொண்டு காளிமுன் தோன்றுகிறார். காளி ஈசனை நடனப் போட்டிக்கு அழைக்கிறாள். இருவரும் நடனமாடும் போது சிவன் காதில் அணிந்திருந்த குழை கீழே விழ, ஆட்டத்தை நிறுத்தாமல் குழையைக் காலால் எடுத்துக் காலைக் காதுவரை உயர்த்திப் பொருத்துகிறார். ஒருகால் ஊன்றி மற்றோர் காலைக் காதுவரை தூக்கி ஆடுவது பெண்களுக்கு இயல்பானதல்ல. இதனால் போட்டியில் காளி தோற்கிறாள். காளியின் ஆணவம் அழிய, அழியாக் கடவுள் ஆடலால் வென்ற தலம். ஈசனின் இந்த நடனத்தின் பெயர் ஊர்த்துவதாண்டவம். ஊர்த்துவதாண்டவ ஈசனின் சிற்பங்கள் பல தலங்களில் உள்ளபோதும் இங்கும், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கம்பத்தடி மண்டபத்திலும், தென்காசி விஸ்வநாதர் ஆலயத்தின் திரு ஓலக்கா மண்படத்திலும், சிதம்பரம் நடராஜப் பெருமாள் நிருத்த சபை மண்டபத்திலும் உள்ள சிற்பங்கள் சிறப்பானவை.

காரைக்கால் அம்மையார்!  இயற்பெயர் புனிதவதியார். திருமணத்திற்குப் பிறகு இவர் கணவர் இவரை தெய்வத்தன்மை பொருந்தியவர் என்று வழிபட்டவுடன் இவர் வாழ விரும்பவில்லை. இறைவனைத் துதிக்கிறார். சிவன் தோன்றி வேண்டும் வரம் யாது என்று வினவ, தன் இளமையையும், அழகையும் நீக்கித் தன்க்குப் பேய் வடிவம் தரும்படி இறைஞ்சுகிறார். அவ்வாறே அருள்கிறார் ஈசன். தலையாலேயே நடந்து ஆலங்காட்டை அடைந்தார். சிவபெருமானின் திருக்கூத்தைக் காலமெல்லாம் கண்டு முக்தி அடைந்தார்.

பழையனூர் நீலி!   தேவாரப் பாடல்கள் திருவாலங்காட்டைப் பழையனூருடன் தொடர்புப்படுத்திப் பாடுகின்றன. பழையனூர் என்பது ஊர். திருவாலங்காடு, காடு. இது அன்றைய நிலை. நீலி என்ற பெண் முற்பிறப்பில் தன் கணவனால் வஞ்சித்துக் கொல்லப்படுகிறாள். இந்தப் பிறப்பில் அவனைப் பழிவாங்கும் பொருட்டு திருவாலங்காட்டில் பேயாகத் திரிகிறாள். தரிசனசெட்டி என்ற பெயரில் அவன் தற்போது வாழ்ந்து கொண்டிருப்பதை இனங்கண்டு தன்னோடு இணையுமாறு அழைக்கிறாள். அவன் பேயென்று இவளை நிராகரிக்கிறான். பழையனூரில் வாழும் வேளாளப் பெருமக்களிடம் சென்று முறையிடுகிறாள். மறுநாள் தீர்ப்பு வழங்குகிறோம்; இன்று ஒன்றாகத் தங்குங்கள் என்கிறார்கள். அதிர்ந்த தரிசனசெட்டி பேயால் தான் கொல்லப்படுவேன் என்று அஞ்சுகிறான். அனைவரும் அவன் உயிருக்கு உத்தரவாதம் அளித்ததால் ஒன்றாகத் தங்குகிறார்கள். நீலி அவனைக் கொன்று பழிதீர்த்துக் கொள்கிறாள். மிகுந்த மனவேதனையுற்ற வேளாளப் பெருமக்கள் 70 பேரும் தீமூட்டி அதில் பாய்ந்து மாய்ந்தனர். திருவாலங்காடு - பழையனூர் செல்லும் வழியில் அவர்கள் தீயில் பாய்ந்த இடத்தில் மண்டபம் உள்ளது.



தலச் சிறப்புகள்:
பஞ்ச சபைகளுள் இது இரத்தின சபை. காரைக்கால் அம்மையாரின் முக்தித் தலம். 

சிவபெருமான் காளி தேவியை நடனத்தால் வென்ற தலம். அருகிலுள்ள காளி கோயிலை தரிசித்த பின்னரே இத்தல இறைவனைத் தரிசிப்பது மரபு.

காரைக்கால் அம்மையாரின் முக்தித் தலமாதலால் இத்தலத்தில் கால் பதிக்க அஞ்சிய சம்பந்தருக்கு தல எல்லையில் சிவபெருமான் காட்சியளித்து அருளியுள்ளார்.